ரஃபேல் விமான விவகாரம்: மோடிக்கு வெட்கமே இல்லையா? ராகுல் கடும் தாக்கு!

 

ரஃபேல் விமான விவகாரம்: மோடிக்கு  வெட்கமே இல்லையா? ராகுல் கடும் தாக்கு!

ரபேல் விமானங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியிடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி: ரஃபேல் விமானங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தியிடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின் போது, சர்வதேச ஒப்பந்தத்தை மீறி  எப்.16 விமானங்களை இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் துஷ்பிரயோகம் செய்ததாக மத்திய அரசு குற்றச்சாட்டியுள்ளது. இதில் ஒரு விமானத்தை இந்திய விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அந்த விமானத்திலிருந்து விழுந்த ஏவுகணையின் உதிரிகளையே இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்தியுள்ளது.

இது குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, ‘ ரஃபேல் விமானங்கள் இல்லாத குறையை இந்தியா உணர்ந்துள்ளது. ரஃபேல் இருந்திருந்தால் நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும் என நாடே ஒருமித்த குரலில் பேசுகிறது. ரஃபேல் விமானங்கள் கொள்முதல் தொடர்பான அரசியல் காரணமாக நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பிரதமர் மோடிக்கு வெட்கமே இல்லையா? ரஃபேல் விமானங்களின் விலையை ஏற்றி 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அனில் அம்பானியிடம் பிரதமர் மோடி கொடுத்துள்ளார். ரஃபேல் விமானங்கள் வர தாமதமானதற்கு மோடியே முழு முதல் காரணம். காலாவதியான விமானங்களைப் பயன்படுத்துவதால்தான் அபிநந்தன் போன்ற வீரமிக்க இந்திய விமானப் படையினர் ஆபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்’ என்று சரமாரியாகக் குற்றஞ்சாட்டினார்.