‘யார் அந்த 7 பேர்?’ – ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடுபவர்களை யார் என கேட்ட ரஜினி!

 

‘யார் அந்த 7 பேர்?’ – ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடுபவர்களை யார் என கேட்ட ரஜினி!

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, ‘யார்?’ என நடிகர் ரஜினி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, ‘யார்?’ என நடிகர் ரஜினி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 வருடங்களுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களை கருணை அடிப்படையிலாவது, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்காத தமிழக அரசியல் தலைவர்களே கிடையாது என்று கூட கூறலாம்.

அந்த வகையில், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு பரிந்துரை கடிதம் அனுப்பியது.

இரண்டு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவரின் உத்தரவுப்படி என்று குறிப்பிட்டு கடந்த 2018 ஏப்ரல் 18-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு பதில் கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில், “முன்னாள் பிரதமர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் பரிந்துரை கடிதத்தை நிராகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தண்டனைக் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எதன் அடிப்படையில் தமிழக அரசின் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குடியரசு தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு, 7 பேரின் விடுதலை தொடர்பாக தங்களுக்கு எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை என்று குடியரசு தலைவர் மாளிகை பதில் அனுப்பியுள்ளது.

மேலும், தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பப்படவில்லை என்றும், உயர்மட்ட அதிகாரியால் 7 பேரின் விடுதலை தொடர்பான பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

rajiv

இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கும் பணி, திரைப்படம் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு நாடகம் ஆடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், ரஜினிக்கு அந்த 7 பேர் குறித்து உடனே நினைவுக்கு வரவில்லை. சட்டென, “யார் அந்த 7 பேர்?” என பத்திரிகையாளர்களிடம் பதில் கேள்வி எழுப்பினார்.

அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் கைதிகள் என எடுத்துக் கொடுத்தவுடன், அது குறித்து தனக்கு தெரியாது என மழுப்புலகாக கூறிவிட்டு ரஜினி சென்றுள்ளார். 

அரசியலில் போர் வரும் வரை காத்திருப்போம் என ரசிகர்களுக்கு ஆறுதல் கூறும் ரஜினியிடம், தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னைகள் குறித்து யாரேனும் எடுத்துக் கூறினால் ரஜினிக்கு உதவியாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.