மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு ரூ.577 கோடி அபராதம்- மத்திய அமைச்சகம் தகவல்

 

மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு ரூ.577 கோடி அபராதம்- மத்திய அமைச்சகம் தகவல்

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 18 மாநிலங்களில் சாலை விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.577.5 கோடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல்.

நம் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. சாலையில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செல்பவர்களால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் நாள்தோறும் உயிரை இழந்து வருகின்றனர். இதனையடுத்து சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், விபத்துக்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி, சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படும். 

நிதின் கட்கரி

மோட்டார் வாகன திருத்த சட்டத்துக்கு பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மக்களின் உயிர்தான் முக்கியம் சட்டத்தில்திருத்தம் செய்ததை மாற்றமுடியாது என மத்திய அரசு உறுதியாக கூறிவிட்டது. கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று நாடு முழுவதும் மோட்டார்வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற மக்களவையில் மோட்டார்வாகன திருத்த சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட அபராத ரசீதுகள் மற்றும் அபராத தொகை குறித்த கேள்விக்கு மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், மோட்டார் வாகன திருத்த சட்டத்தை எந்தவொரு மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ அமல்படுத்த மாட்டோம் என கூறியதாக எனது அமைச்சகத்துக்கு தகவல் வரவில்லை என தெரிவித்தார்.

அபராதம் வசூலிக்கும் போலீசார்

மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்த செப்டம்பர் 1 முதல் 18 மாநிலங்களில் போக்குவரத்து  போலீசார், சாலையில் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.577.5 கோடி அபராதம் விதித்துள்ளனர். அதிகபட்சமாக உத்தர பிரதேச சேர்ந்த வாகன ஓட்டிகள் ரூ.201.90 கோடி அபராதம் செலுத்தியுள்ளனர். அடுத்து குஜராத் மற்றும் பீகார் வாகன ஓட்டிகள் தராளமாக அபராதம் செலுத்தியுள்ளனர். குறைந்தபட்சமாக கோவாவில் ரூ.7,800க்கு அபாரத ரசீது வழங்கப்பட்டுள்ளது. அடுத்து மகாராஷ்டிராவில் மொத்தம் ரூ.4.16 லட்சத்துக்கு விதிமுறையை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.