மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி: களத்தில் இறங்கிய 100 போலீஸ் அதிகாரிகள்

 

மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி: களத்தில் இறங்கிய 100 போலீஸ் அதிகாரிகள்

பிரதமர் மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பென் மோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை விரைந்து பிடிப்பதற்காக டெல்லி காவல்துறை குறைந்தபட்சம் 100 போலீசார்களை 20 குழுக்களாக பிரித்து களத்தில் இறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் தமயந்தி பெண் மோடி. இவர் அமிர்தசரஸ் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை ஒரு வேலையாக சென்றுள்ளார். அங்குள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றை முன்பதிவு செய்து இருந்தார். இதற்காக பழைய டெல்லி ரயில் நிலையத்திலிருந்து அங்கு ஆட்டோவில் சென்றார். தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் தமயந்தி பென் மோடி ஆட்டோவிலிருந்து கீழே இறங்கி உள்ளார்.

மோடி

அப்போது தமயந்தியை நெருங்கிய 2 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பர்சை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். அந்த பர்சில் ரூ.56 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன், டெபிட் கார்ட் உள்ளிட்டவை இருந்தன. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த சம்பவம் நடந்த பகுதியில்தான் டெல்லி கவர்னர் மற்றும் முதல்வர் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளது. வி.ஐ.பி.க்கள் நிறைந்த பகுதியில் மற்றும் பிரதமர் மோடியின் உறவினரிடமே வழிப்பறி சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வழிப்பறி

இந்த சூழ்நிலையில், தமயந்தி பென் மோடியின் வழக்கை விரைந்து முடிப்பதற்காக, குற்றப்பிரிவை சேர்ந்த குறைந்தபட்சம் 100 போலீசார்களை 20 குழுக்களாக பிரித்து களம் இறக்கியுள்ளது டெல்லி காவல்துறை. அவர்கள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமயந்தி பென் மோடியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களும் அவர் வந்த ஆட்டோவை தொடர்ந்து 15 நிமிடத்துக்கு மேல் பின் தொடர்ந்து வந்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இதுவரை சந்தேகத்துக்குரிய 50 நபர்களை சுற்றி வளைத்துள்ளோம். குற்றவாளி ஒருவரின் அடையாளம் தெரிந்தது என தெரிவித்தார்.