மொத்தமாக விட முடியாது ஒவ்வொரு ஆளாத்தான் விடுவோம்! காஷ்மீர் நிர்வாகம் தகவல்

 

மொத்தமாக விட முடியாது ஒவ்வொரு ஆளாத்தான் விடுவோம்! காஷ்மீர் நிர்வாகம் தகவல்

காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை மொத்தமாக விடுதலை செய்ய முடியாது. ஒவ்வொரு தனிநபரையும் சரியாக மதிப்பீடு செய்த பிறகே படிப்படியாக விடுவிப்போம் என காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதுடன், அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இந்த நடவடிக்கையை மேற்கொள்வற்கு முந்தைய நாளில் காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் தலைவர்களை காவலில் வைத்தது. மேலும் காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது மேலும் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. 

சத்ய பால் மாலிக்

தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, லேண்ட் லைன் இணைப்புகள் முற்றிலுமாக செயல்பட தொடங்கியது. ஆனால் 50 நாட்கள் தாண்டிய பிறகும் காவலில் இருக்கும் தலைவர்கள் விடுவிக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்கின் ஆலோசகர் பரூக் கான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைவர்களும் சரியாக பகுப்பாய்வு மற்றும் முறையாக மதிப்பீடு செய்த பிறகு ஒருவர் பின் ஒருவராக படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள். தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் தேவேந்தர் ராணா மற்றும் எஸ்.எஸ். சலாத்தியா, காங்கிரஸின் ராமன் பல்லா மற்றம் பாந்தர்ஸ், பாந்தர்ஸ் கட்சி தலைவர் ஹர்ஷ் தேவ் சிங் ஆகியோர் வீட்டு காவலில் இல்லாத முக்கிய தலைவர்கள். சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு காஷ்மீரில் தீவிரவாதம் அதிகரிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள்

காவலில் வைக்கப்பட்டு இருக்கும் தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என காஷ்மீர் நிர்வாகம் கூறினாலும், காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஜே.கே. மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷாஜித் கனி லோனி ஆகியோர் தற்போதைக்கு விடுவிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. மேலும் காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 250 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.