மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவின் தந்தை காலமானார்

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. சத்யா நாதெல்லாவின் தந்தை காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் தந்தையும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பி.என். யுகந்திரர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

சர்வதேச நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தற்போது வழிநடத்துபவர் இந்தியரான சத்யா நாதெல்லா. இவரின் தந்தை பி.என். யுகந்திரர். ஹைதராபாத்தில் பன்ஞ்ரா ஹில்ஸில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார் பி.என்.யுகேந்திரர். 80 வயதான யுகந்திரர் உடல் நல குறைவு காரணமாக நேற்று வீட்டில் காலமானார். யுகந்திரர் உடலுக்கு உடனடியாக இறுதி சடங்கு செய்யப்படுமா அல்லது சத்யா நாதெல்லா வந்த பிறகு இறுதி சடங்கு நடைபெறுமா என்ற தகவல் சரியாக தெரியவில்லை.

சத்யா நாதெல்லா

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பி.என்.யுகந்திரர் 1962 ஐ.பி.எஸ். பேட்ச்சை சேர்ந்தவர். பிரிக்கப்படாத ஆந்திரா மற்றும் மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகித்தவர் பி.என். யுகந்திரர். மேலும், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் கிராம மேம்பாட்டு அமைச்சகத்தில் முக்கிய  அதிகாரியாக பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என சமகாலத்தவர்களால் அறியப்பட்டவர். 

நரசிம்ம ராவ்

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி (2004-09) நடைபெற்ற போது திட்ட கமிஷனில் ஒரு உறுப்பினராக அங்கம் வகித்தவர் பி.என்.யுகந்திரர். மிகவும் எளிமையான மனிதர் பி.என்.யுகேந்திரர். தனது ஐ.ஏ.எஸ். நண்பர் கே.ஆர். வேணுகோபாலின் மகள் அனுபமாவை தனது மகன் நாதெல்லாவுக்கு எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணத்துக்கு அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவை யுகந்திரர் அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.