மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா 377 ரன்கள் குவிப்பு

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி: இந்தியா 377 ரன்கள் குவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 377 ரன்கள் குவித்துள்ளது

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 377 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 3-வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 4-வது ஒருநாள் போட்டி மும்பையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, தவான் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய தவான் 40 பந்துகளில் 38 ரன்கள் அடித்து கீமோ பந்தில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 16 ரன்களில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வந்த ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா சதம் அடித்து, தனது 21-வது சதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 312-ஆக இருந்த போது 162 ரன்களில் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ராயுடு 80 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி 23 ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 377 ரன்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.