மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சுவர் இடிக்கும் பணி தொடக்கம் !

 

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சுவர் இடிக்கும் பணி தொடக்கம் !

நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

tt

அதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 10 லட்சமும் பணமும் புதிய வீடும் கட்டித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ttn

இது குறித்துப் பேசிய அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி, இடிந்து விழுந்த அந்த வீட்டின் மீதமுள்ள சுவர் இடிக்கப்படும் என்றும் அதன் சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் பாதுகாப்பாகத் தான் அந்த சுவரை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். அதன் படி, 20 அடி உயர மதில் சுவரின் எஞ்சிய பகுதிகளை இடிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. மேலும், இரண்டு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் அந்த சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.