மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் அமையும் ஜியோமி உற்பத்தி ஆலை!

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் அமையும் ஜியோமி உற்பத்தி ஆலை!

சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது ஏழாவது உற்பத்தி ஆலையை சென்னையில் அமைக்கவுள்ளது

புதுதில்லி: சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது ஏழாவது உற்பத்தி ஆலையை சென்னையில் அமைக்கவுள்ளது.

சீனாவின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஜியோமி, ஸ்மாட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஐ போன் மூலம் இந்திய சந்தையில் அறிமுகமான ஜியோமி தனது தாக்கத்தை இந்தியாவிலும் ஏற்படுத்த தவறவில்லை.

இந்திய சந்தையில் தனது இருப்பை வலுவாக்கி கொள்ள விரும்பிய ஜியோமி இங்கு உற்பத்தி ஆலைகளை அமைக்க திட்டமிட்டது. அதன்படி, ஹைபேட், ஃபாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை தொடங்கியது.

xiaomi

அந்தவகையில், தற்போது தனது ஏழாவது உற்பத்தி ஆலையை ஜியோமி நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனமான ஃபிளெக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் தொடங்கவுள்ளது. சுமார் ஒரு மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலையை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜியோமி நிறுவனம் தொடங்கவுள்ளது.

xiaomi

இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னை மகிழ்ச்சியடை செய்வது எதுவெனில், இந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதில், பெண்­களின் பங்கு, 95 சத­வீ­த­மாக உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 95 சதவீத ஜியோமி போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, 65 சதவீத போன்கள் இங்கேயே விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ள மனு ஜெயின், விரைவில் இது 99 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். 

தொலைக்காட்சிகள், பவர் பேங்குகள், ஸ்மார்ட்போன்கள், பேட்டரிகள், சார்ஜர்கள் யூஎஸ்பி கேபிள்களையும் ஜியோமி நிறுவனம் உற்பத்தி செய்கிறது என பெருமிதம் தெரிவித்த மனு ஜெயின், மற்ற தயாரிப்பு பிரிவுகளையும் விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.