மேகதாதுவில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது: கர்நாடக அரசு அறிவிப்பு

 

மேகதாதுவில் அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது: கர்நாடக அரசு அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்டும்  முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான, முதற்கட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் கர்நாடகா அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசும் கர்நாடகாவிற்கு ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

ஒருவேளை, மேகதாதுவில் கர்நாடக அரசு அணையைக் கட்டிவிட்டால், தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். இதனால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

மத்திய அரசின் இந்த ஒருதலை பட்சமான முடிவை எதிர்த்து திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள், திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த சூழலில், இன்று அவசரமாகக் கூடிய தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் இன்று மாலை கூடிய அமைச்சரவை கூட்டத்தில், மேகதாது அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மேகதாது அணைக்கான கட்டுமான பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிடவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.