மெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 

மெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் சமாதியை அவரது நினைவிடமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தியது. இதற்காக ரூ.50.80 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் நடைபெற்றது. மேலும், ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான முன்மாதிரி வடிவமைப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மெரீனா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சித் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்டவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக வருகிற 30-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.