மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளம் பெற செல்ல வேண்டிய கோயில்கள்

 

மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வளம் பெற செல்ல வேண்டிய கோயில்கள்

மப்பேடு ஶ்ரீசிங்கீஸ்வரர் கோயில்

மூலம்:

கோயில்: மப்பேடு ஶ்ரீசிங்கீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபுஷ்பகுஜாம்பாள்
தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.
சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும். 
இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.

பூராடம்:

கோயில்: கடுவெளி ஶ்ரீஆகாசபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீமங்களாம்பிகை
தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. “கடுவெளி’ என்றால் “ஆகாசவெளி’. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார். 
சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.

உத்திராடம்:

கோயில்: கீழப்பூங்குடி ஶ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீமீனாட்சியம்மன்
தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது. 
சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும். 
இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ., 
திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8

திருவோணம்:

கோயில்: திருப்பாற்கடல் ஶ்ரீ பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்
தாயார்: ஶ்ரீஅலர்மேலுமங்கைத் தாயார்
தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள். 
சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும். 
இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில். 
திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30

அவிட்டம்:

கோயில்: கீழ்க்கொருக்கை ஶ்ரீபிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீபுஷ்பவல்லி
தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் “கோரக்கை’ என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் “குறுக்கை’ என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது “கொருக்கை’ எனப்படுகிறது.
சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6

சதயம்:

கோயில்: திருப்புகலூர் ஶ்ரீஅக்னிபுரீஸ்வரர் கோயில்
அம்மன்: ஶ்ரீகருந்தார் குழலி
தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். “புகல்’ என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். ஶ்ரீவர்த்தமானேஸ்வரர், ஶ்ரீமனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர். 
சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ., 
திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9