மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் : நீதிமன்றம் உத்தரவு

 

மூடப்பட்ட  குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் : நீதிமன்றம் உத்தரவு

குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்த நிலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தனர்.

உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்த நிலையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனை எதிர்த்து குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின் படி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் 684 குடிநீர் உற்பத்தி ஆலைகள் மூடப் பட்டிருப்பதாகத் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. 

ttn

அதனையடுத்து, குடிநீர் ஆலைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மூடப் பட்ட ஆலைகள் தற்காலிகமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், குடிநீர் ஆலைகள் போராட்டம் நடத்துவதால் நீதிமன்றத்துக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும், நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளின் உபயோகத்திற்கு ஏற்றாற்போல கட்டணம் விதிக்கலாமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையைப் புதன் கிழமை (இன்று) ஒத்தி வைத்தனர். 

ttn

 623 ஆலைகளுக்குச் சீல் வைக்கப்பட்ட நிலையில், ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் இதனால் பாதிக்கப்பட்டனர். குடிநீர் ஆலைகளுக்கு நீதிமன்றம் நிரந்தர சீல் வைத்து விடுமா? அல்லது மீண்டும் தற்காலிகமாகத் திறக்க அனுமதி வழங்குமா என்று குடிநீர் ஆலை உரிமையாளர்கள் பெரும் குழப்பத்திலிருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்களின் உரிமங்களைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பத்தோடு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து குடிநீர் ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.