மு.க.ஸ்டாலின் – கருணாஸ் சந்திப்பு….. கைமாறியது கூவத்தூர் ரகசியம்?

 

மு.க.ஸ்டாலின் – கருணாஸ் சந்திப்பு….. கைமாறியது கூவத்தூர் ரகசியம்?

இனி வரும் காலங்கள் தினகரனுக்கும், அதிமுகவுக்கும் குடைச்சல் தரக்கூடிய காலங்களாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

திருவாடானை எம்.எல்.ஏ கருணாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டபோது தேவைப்பட்டால் கூவத்தூர் தொடர்பான ரகசியங்களை உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றார். அவரது இந்த பேச்சு கூவத்தூரின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வைத்தது. கருணாஸ் கூறிய ரகசியம் என்பது, கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு அளிக்கப்பட்ட பண பரிவர்த்தனை உள்ளிட்ட சில வீடியோக்கள்தான் என கூறப்படுகிறது.

இந்த வீடியோ டிடிவி தினகரனிடம் மட்டும்தான் இருக்கிறது என நினைத்த ஆட்சியாளர்கள், கருணாஸை கைது செய்ததும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவ வேண்டும் என்ற முடிவில் இருந்ததாகவும் ஆனால் கருணாஸிடமும் வீடியோ இருப்பதை உணரந்த அரசு அந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

karunas

இதற்கிடையே கூவத்தூர் தொடர்பாக கருணாஸ் ஏன் இப்போது பேச வேண்டும் என டிடிவி தினகரன் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. தமிழக அரசியலில் தற்போது வளர்ந்து வரும் தன்னை இது மிகவும் பாதிக்கும் என நினைத்த தினகரன், இந்த விவகாரத்தை மீண்டும் பேச வேண்டாம் என கருணாஸூக்கு தூது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இது இப்படி இருக்க கருணாஸ் சமீபகாலமாக திமுக முகாம் பக்கம் தென்பட்டு கொண்டிருக்கிறார். அக்கட்சி நடத்திய போட்டி சட்டமன்றத்தில் கலந்து கொண்டு ஆளும் அரசை கடுமையாக சாடினார் கருணாஸ். அதில் இருந்தே தினகரன் மற்றும் அதிமுக, கருணாஸ் மேல் ஒரு கண் வைத்துள்ளதாகவும், திமுக தூண்டுதல் பேரில்தான் அவர் கூவத்தூரை மீண்டும் கையில் எடுத்தார் என நினைப்பதாகவும் தகவல்கள் கூறின.மேலும், இந்த விவகாரம் மீண்டும் வெளியில் வந்தால் கூவத்தூர் என்ற ஒற்றைக்கல்லை கொண்டு தினகரன் மற்றும் அதிமுக என்ற இரு மாங்காய்களை அடித்துவிடலாம் என அறிவாலயம் காய் நகர்த்தியதாம். 

arivalayam

இதற்காகத்தான் சிறையில் இருந்து கருணாஸ் வந்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை திமுகவின் எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் முதல் ஆளாக போய் பார்த்தாராம். இதனை அறிந்த டிடிவி தினகரன் உடனடியாக கருணாஸை பார்ப்பதற்காக வெற்றிவேலை அனுப்பி வைத்ததாகவும், அப்போது கருணாஸ் திமுக பக்கம் செல்லக்கூடாது கூவத்தூர் தொடர்பான ரகசியங்களை வெளியிடக்கூடாது என டிடிவி தரப்பில் அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனிடையே மு.க.ஸ்டாலினை சந்திக்க கருணாஸ் தரப்பு விரும்பியதாகவும் ஆனால் ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இன்னும் சில வாரங்களில் ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு இருக்கும் என டாப் தமிழ் நியூஸ் முன்னரே செய்தி வெளியிட்டிருந்தது.

dmk

இந்நிலையில் டாப் தமிழ் நியூஸ் கூறியிருந்தது போலவே, கருணாஸ் இன்று ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  முக்கியமாக கூவத்தூர் தொடர்பாக கருணாஸிடம் இருக்கும் ரகசியம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், அந்த ரகசியத்தை வைத்து கருணாஸ் – திமுக.,வுக்கு இடையே சில உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் எதிரொலி இனி வரும் நாட்களில் தமிழக அரசியலில் பிரதிபலிக்கும் எனவும் கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

ஆரம்பத்தில் இருந்தே சசிகலா பக்கம் நிற்கும் கருணாஸுக்கு, டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதனால் இனி தினகரனை நம்பி பயனில்லை. அவர் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் செய்வார் எனவே இனி திமுக பக்கம் நிற்பதே தமக்கு பாதுகாப்பு. அதுமட்டுமின்றி தன்னை தகுதி நீக்கம் செய்யவும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

dhinakarn

இந்த நேரத்தில் திமுக என்ற பெரிய கட்சியின் நிழலில் இருப்பதுதான் தனக்கு பாதுகாப்பு என கருணாஸ் முடிவெடுத்துதான் இன்று மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்திருக்கிறார் எனவும், கூவத்தூர் தொடர்பான ரகசியம் கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை திமுக பயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்தும். எனவே இனி வரும் காலங்கள் தினகரனுக்கும், அதிமுகவுக்கும் குடைச்சல் தரக்கூடிய காலங்களாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.