முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது மனோகர் பாரிக்கர் உடல்!

 

முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது மனோகர் பாரிக்கர் உடல்!

மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது

பனாஜி: மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் வெளிநாட்டிலும், டெல்லி எய்ம்ஸிலும் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி சட்டப்பேரவைக்கு வந்தார். பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலமின்றி நேற்று அவர் காலமானார். அவருக்கு வயது 63.

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாரிக்கர் மறைவையொட்டி நாடு முழுவதும் இன்று தேசிய துக்கம் நாளாக அனுசரிக்கப்படுகிறது. கோவா அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிக்கரின் உடல் இன்று காலை பனாஜி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கலா அகாடமிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

தில்லியில் இருந்து கோவா வந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் உள்ளிட்டோர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின்னர், காலா அகாடமி பகுதியில் இருந்து மிராமர் கடற்கரைக்கு பாரிக்கரின் உடல் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மிராமர் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட பாரிக்கரின் உடலுக்கு இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டு, 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் தகனம் செய்யப்பட்டது.