மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் பலி!

 

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் பலி!

மகாராஷ்டிர தலைநகர் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்  வரலாற்று சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம் மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது.

கடந்த 1887-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், எப்போதுமே பரபரப்பாக இயங்கும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிமாநில பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக, மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், 10 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு மீட்புப்படையினர் அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.