முன்னாடியே தெரிந்திருந்தால் ரத்த தானம் செய்திருக்க மாட்டேன்: வாலிபர் உருக்கம்

 

முன்னாடியே தெரிந்திருந்தால் ரத்த தானம் செய்திருக்க மாட்டேன்: வாலிபர் உருக்கம்

எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது முன்னரே தெரிந்திருந்தால் ரத்த தானம் செய்திருக்க மாட்டேன் என கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்த இளைஞர் கூறியுள்ளார்.

விருதுநகர்: எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது முன்னரே தெரிந்திருந்தால் ரத்த தானம் செய்திருக்க மாட்டேன் என கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்த இளைஞர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதனையடுத்து, அருகில் உள்ள ஒரு ரத்த வங்கியில் இளைஞர் ஒருவர் தானமாக கொடுத்த ரத்தத்தை, பரிசோதித்துப் பார்க்காமல் கர்ப்பிணி பெண்ணின் உடலில் மருத்துவமனை ஊழியர்கள் ஏற்றியுள்ளனர். ஆனால், தானமாக பெறப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்த தானம் செய்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இளைஞர்  சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,

சிவகாசியில் பணியாற்றி வந்த நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ரத்த தானம் செய்து வருகிறேன். ஆனால் எனக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக ரத்த வங்கியினர் கூறவில்லை. அதன்பிறகு கடந்த சில மாதங்களாக நான் பெங்களூரு சென்று விட்டேன். இந்த நிலையில் உறவுப்பெண்ணுக்கு ரத்தம் தேவைப்பட்டதால் டிசம்பர் 3-ந்தேதி சிவகாசி வந்து ரத்ததானம் செய்தேன். அதனை பெற்றவர்களும் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் வெளிநாடு செல்ல திட்டமிட்டேன். அதற்காக கடந்த 8-ந்தேதி மதுரை மேலூரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது தான் எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சிவகாசி சென்று அங்கு வேறு ரத்த வங்கியில் பரிசோதனை செய்தேன். அதிலும் எச்.ஐ. வி. தொற்று இருப்பது உறுதியானது.

எனவே நானாகவே சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு கடந்த 10-ம் தேதி சென்று இதுபற்றி தெரிவித்தேன். நான் தானம் கொடுத்த ரத்தத்தை உறவினருக்கு செலுத்த வேண்டாம் என்றேன். அங்கிருந்த ஊழியர்கள் உங்கள் உறவினருக்கு செலுத்தவில்லை எனக் கூறியதால் நான் வீடு திரும்பி விட்டேன்.

இந்த சூழலில் தான் சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எனது ரத்தம் வழங்கப்பட்ட விவரம் தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு முதல் ரத்தம் வழங்கிவரும் நிலையில் கடந்த 3-ந்தேதி ரத்த தானம் கொடுத்த பிறகும் சரி ரத்தவங்கி ஊழியர்கள் யாரும் எனக்கு எச்.ஐ.வி. தொற்று பற்றி தெரிவிக்கவில்லை.

நானாக முன்வந்தே இதனை தெரிவித்தேன். முன்பே தெரிந்திருந்தால் ரத்ததானம் கொடுத்து இருக்க மாட்டேன். ஆனால் தற்போது என்னை போனில் தேடியதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. கடந்த 3-ம் தேதி கூட ரத்ததானம் செய்துள்ளேன் என உருக்கமாக கூறியிருக்கிறார்.