முத்தலாக் மசோதா நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல்

 

முத்தலாக் மசோதா நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது.

முத்தலாக் முறையை குற்றமாக கருதும் சட்ட மசோதா கடந்த கூட்டத் தொடரின் போது, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, முத்தாலக் முறை சட்டவிரோதமானது. அவ்வாறு மனைவியை விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமின் வழங்குவது உள்பட சில திருத்தங்களை மத்திய அரசு செய்தும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.

இதனிடையே, முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதாவை அவசர சட்டமாக நிறைவேற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதற்கு நாடாளுமன்றத்தில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒப்புதல் வாங்க வேண்டும்.

இதனைத்தொடர்ந்து, நடப்பு நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில் இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவை சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிமுகம் செய்தார். அதன் மீதான விவாதம், கடந்த 27-ம் தேதி மக்களவையில் நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முத்தலாக் மசோதாவில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வரவும், மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அனுப்பவும் வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது.

இதனால், விவாதம் முடிந்தவுடன் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது. அதன்பின், நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். மசோதாவை நிறைவேற்ற போதுமான வாக்குகள் கிடைத்ததையடுத்து, வெற்றிகரமாக முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது, திருத்தம் செய்யப்பட்ட இந்த மசோதாவை நிராகரிக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அங்கு மசோதா நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.