முதலீட்டாளர்களை பண மழையில் நனைத்த பங்குச் சந்தைகள்

 

முதலீட்டாளர்களை பண மழையில் நனைத்த பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தை

கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் உயர்வுடன் முடிவடைந்தது. பங்குச் சந்தைகள் இன்று முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்தன. பல நிறுவன பங்குகளின் விலை விறுவிறுவென உயர்ந்ததை இதற்கு முக்கிய காரணம்.

அமெரிக்காவில் அந்நாட்டு பெடரல் வங்கியின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. இதனால் இன்று சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மேலும், எதிர்மறையான எந்த தகவல்களும் வெளியே வராததால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சக்கை போடு போட்டது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், யெஸ் பேங்க், சன்பார்மா,எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி, டாட்டா மோட்டார்ஸ் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், என்.டி.பி.சி., ஐ.டி.சி., எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஷேர் மார்க்கெட்

மும்பை பங்குச் சந்தையில் 1,530 நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது. அதேசமயம் 1,010 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 140 நிறுவனங்களின் பங்கு விலை எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,51,30,670.73 கோடியாக உயர்ந்தது. நேற்று பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,49,56,109.64 கோடியாகத்தான் இருந்தது.

இன்றைய வர்த்தக தினத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முந்தைய வர்த்தக தினத்தின் முடிவை காட்டிலும் 488.89 புள்ளிகள் உயர்ந்து 39,601.63 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 140.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,831.75 புள்ளிகளில் நிலை கொண்டது.