முதலீட்டாளர்களை கதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி…

 

முதலீட்டாளர்களை கதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி…

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

நாளை மறுநாள் டிசம்பர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும் என்பதால் முதலீட்டாளர்கள் லாப  நோக்கில் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக எந்தவொரு செய்திகளும் வெளியாகததால் அதுவும் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், இண்டஸ்இந்த் வங்கி, ஓ.என்.ஜி.சி., கோடக்மகிந்திரா வங்கி, ஹீரோமோட்டோகார்ப் மற்றும் பவர்கிரிட் உள்பட 13 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.சி.எல். டெக்னலாஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,149 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,335 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174  நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.99 லட்சம் கோடியாக சரிந்தது. இன்று மட்டும் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின்முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 181.40 புள்ளிகள் வீழ்ந்து 41,461.26 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 48.20 புள்ளிகள் சரிந்து 12,214.55 புள்ளிகளில் முடிவுற்றது.