முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் 777 புள்ளிகள் குறைந்தது!

 

முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு! சென்செக்ஸ் 777 புள்ளிகள் குறைந்தது!

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 777 புள்ளிகள் குறைந்தது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த ஜூன் மாத காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட தொடங்கி உள்ளன. இது குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் மத்திய பட்ஜெட் தாக்கம் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன.

சென்செக்ஸ்

மேலும், கடந்த ஜூன் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் சென்ற மே மாத தொழில் துறை உற்பத்தி குறித்த மதிப்பீடுகளும் பங்கு வர்த்தகத்துக்கு பாதகமாக இருந்தது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டது போன்ற சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக இல்லாததால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இந்த வாரம் கடுமையாக சரிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய நிலவரப்படி, பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.148.08  லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமை (ஜூலை 5) வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.151.35 லட்சம் கோடியாக இருந்தது. ஆக இந்த  வாரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல்  நஷ்டம் ஏற்பட்டது.

பங்குச் சந்தை நிலவரம்

நேற்றோடு முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 777.16 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 258.65 புள்ளிகள் வீழ்ந்தது.