முதலீட்டாளர்களுக்கு நிம்மதி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது..

 

முதலீட்டாளர்களுக்கு நிம்மதி கொடுத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 637 புள்ளிகள் உயர்ந்தது.

அன்னிய முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட உபரிகட்டணம் மற்றும் சூப்பர் ரிச் வரி போன்றவற்றை மத்திய அரசு திரும்ப பெரும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சிறிது அதிகரித்தது. பல முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இருந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க் மற்றும் மாருதி உள்பட 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தை

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,375 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,033 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும், 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.78 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.138.77 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 636.86 புள்ளிகள் உயர்ந்து 37,327.36 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 176.95 புள்ளிகள் அதிகரித்து 11,032.45 புள்ளிகளில் முடிவுற்றது.