முதலீட்டாளர்களுக்கு திகிலாக இருந்த பங்கு வர்த்தகம்….. பயமுறுத்தினாலும் ரூ.3.49 லட்சம் கோடி லாபம்….. சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்வு…..

 

முதலீட்டாளர்களுக்கு திகிலாக இருந்த பங்கு வர்த்தகம்….. பயமுறுத்தினாலும் ரூ.3.49 லட்சம் கோடி லாபம்….. சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்வு…..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் திகலாக இருந்தது. சென்செக்ஸ் 1,325 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கிய 10 நிமிடத்துக்குள் சென்செக்ஸ் 10 சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட்டை தொட்டது. இதனையடுத்து பங்கு வர்த்தகம் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து முதலீட்டை அதிகளவில் திரும்ப பெற தொடங்கியது மற்றும் முதலீட்டாளர்களின் எதிர்மறையான மனநிலையே இதற்கு காரணம். வர்ததகம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதலீட்டாளர்களின் பணம் ரூ.12 லட்சம் கோடி காணாமல் போனது.

தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்

பங்குச் சந்தைகளில் மீண்டும் வர்த்தகம் தொடங்கிய பிறகு சூழ்நிலை அப்படியே தலைகீழாக மாறியது. காலையில் வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் இழந்த சென்செக்ஸ், பின் வர்த்தகம் தொடங்கிய இழப்பிலிருந்து மீண்டதோடு நேற்றை காட்டிலும்  ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவடைந்தது. சீனாவின் மையவங்கி சில வங்கிகளின் கையிருப்பு வைக்க வேண்டிய விகிதத்தை குறைத்தது. மேலும் பல நாடுகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி  இருப்பது, கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்தை இத்தாலி விஞ்ஞானிகள் விரைவில் வெளியிடுவார்கள் என்ற தகவல் மற்றும் முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குகளை வாங்கி குவிக்க தொடங்கியது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் விறுவிறுவென ஏற்றம் கண்டது.

ஸ்டேட் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., சன்பார்மா, ஓ.என்.ஜி.சி., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,244 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,143 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.129.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.3.49 லட்சம் கோடி லாபம் கிடைத்து.

பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,325.34 புள்ளிகள் உயர்ந்து 34,103.48 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 365.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 9,955.20 புள்ளிகளில் முடிவுற்றது.