முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்; எதிர்க்கட்சிகளிடம் பணிந்தார் ட்ரம்ப்

 

முடிவுக்கு வந்தது அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்; எதிர்க்கட்சிகளிடம் பணிந்தார் ட்ரம்ப்

நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தது

வாஷிங்டன்: நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம் செயல்பாட்டுக்கு வந்தது.

அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி 2018-ஆம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. அப்போது, அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுவது வழக்கம்.

அதன்படி அமெரிக்க நாடாளுமன்றம், 2018-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்காக கூடிய போது, மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் அந்நாட்டின் செனட் அவை  ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை பட்ஜெட் நிறைவேறவில்லை

இதனால், செலவினங்களுக்கு நிதி இல்லாமல் அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டது. அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் (Shutdown) என்பது மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும் என்பதாகும். எனவே, அந்நாட்டில் அத்தியாவசியத் தேவைகளுக்கான துறைகள் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் தற்போது 4-வது முறையாக ஏற்பட்டது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக அந்நாட்டு நிர்வாகத்தில் முடக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடிவுக்கு வந்தது. செனட் மற்றும் பிரதிநிகள் சபை இரண்டும் தற்காலிகமாக இந்த அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கு ஒப்புதல் அளித்து அதிபர் ட்ரம்ப்பும் கையெழுத்திட்டுள்ளார்.