மீண்டும் தாமரைதான் மலரும்: அடித்து கூறும் தமிழிசை

 

மீண்டும் தாமரைதான் மலரும்: அடித்து கூறும் தமிழிசை

இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிதான் மலர போகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருச்சி: இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிதான் மலர போகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தான் ஆட்சி செய்த 3 மாநிலங்களை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி செய்த மாநிலங்களை இழந்துள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகங்கள் வகுப்பதை பாஜக தற்போதிலிருந்தே தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக மகா சக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 5 மாநில தேர்தல்களில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே பாஜக ஆட்சியை இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் வெறும் 4 இலக்க வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்துள்ளோம்.

வாக்கு சாவடிக்கு ஒரு வாக்கு கூடுதலாக பெற்று இருந்தால் கூட அது சட்டசபை தொகுதி அளவில் வரும்போது சில நூறு வாக்குகள் கூடுதலாக கிடைத்து பல இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும். முடிவு வேறு மாதிரி வந்திருக்கும். எனவே மகாசக்தி மற்றும் சக்தி கேந்திர அமைப்புகளின் நிர்வாகிகள் ஒருவரையும் விட்டுவிடாமல் அனைத்து வாக்காளர்களிடமும் நமது செயல்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை கவரவேண்டும். இந்தியாவில் அடுத்து மலர இருப்பதும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.