மீண்டும் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி

 

மீண்டும் சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 470 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க மைய வங்கி எதிர்பார்த்த மாதிரியே வட்டியை குறைத்தது. இருப்பினும் இன்னும் எவ்வளவு தூரம் குறைக்கும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை தொடர்ந்து திரும்ப பெற்று வருகின்றனர். பொருளாதார மந்தநிலையை போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் அது எதிர்பார்ப்புகளை காட்டிலும் குறைவு என கருதப்படுகிறது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது.

அமெரிக்க மைய வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 722 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,790 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில் 116 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.54 லட்சம் கோடியாக சரிந்தது. நேற்று வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.19 லட்சம் கோடியாக இருந்தது. 

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் பேங்க், மாருதி, ஸ்டேட் வங்கி, டெக்மகிந்திரா, வேதாந்தா, மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 470.41 புள்ளிகள் குறைந்து 36,093.47 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 135.85 புள்ளிகள் சரிந்து 10,704.80 புள்ளிகளில் முடிவுற்றது.