மீண்டும் கதை திருட்டு சர்ச்சை: சிக்கிய பிரபல நடிகரின் திரைப்படம்; உண்மை நிலவரம் என்ன?

 

மீண்டும் கதை திருட்டு சர்ச்சை: சிக்கிய பிரபல நடிகரின் திரைப்படம்; உண்மை நிலவரம் என்ன?

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை தன்னுடைய தொடர்கதையின் கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் கதை தன்னுடைய தொடர்கதையின் கருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இயக்குநர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தன்னுடைய தொடரின் கருவிலிருந்து உருவாக்கியுள்ளார்கள் என்று எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அவர், ‘சென்ற வருடம் நான் oneindia -ல் எழுதிய ஆன் லைன் தொடர் ஒன்+ஒன் =ஜீரோ தொடர்கதையின் அடிப்படை கருவான 18 வயதுக்கு குறைவான சிறுவர்களை Brian wash செய்து, தமக்கு வேண்டாதவர்களைக் கொலை செய்து சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி எழுதியிருந்தேன். அந்தக் கருவை அப்படியே காப்பி அடித்து ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளார்கள். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் சட்டரீதியாக நடிவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இது குறித்து இயக்குநர் பாக்யராஜிடம் அவர் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சர்கார் கதைத் திருட்டு விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், தற்போது விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.