மீண்டும் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்: சென்னை வானிலை மையம்!

 

மீண்டும் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்: சென்னை வானிலை மையம்!

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கஜா புயல் இன்று காலை  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும். இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 – 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் இது  நவம்பர் 19, 20 தேதிகளில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும்.  மேலும், மீனவர்கள் இன்று மதியம் முதல் கடலுக்குச் செல்லலாம்.ஆனால் வரும் நவம்பர் 18 ஆம் தேதி தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதியிலும், 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ ஆக இருக்கும் நிலையில், இந்த மழையளவானது 23 விழுக்காடு குறைவு எனவும் தெரிவித்தார். நேற்று வரை 29 விழுக்காடு குறைவாக இருந்த நிலை, தற்போது 23 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன்மூலம் நமக்கு 6 விழுக்காடு அளவு மழை நமக்கு கிடைத்துள்ளது. புயலானது இன்னும் 3 மணி நேரத்திற்குள் கேரள மாநிலம் நோக்கி பயணித்து பின் 24 மணி நேரத்திகுள் அரபிக் கடலை சென்றடையும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை – 17 செ.மீ,  அதிராமப்பட்டினம் – 16 செ.மீ, பேராவுரணி, தஞ்சை, பட்டுக்கோட்டை, நெய்வேலி – 14 செ.மீ, விருதாச்சலம் – 12 செ.மீ,  செங்கல்பட்டு – 11 செ.மீ, கடலூர் – 9 செ.மீ பதிவாகி உள்ளது.