மினிமம் பேலன்ஸ் இல்லை! வாடிக்கையாளர்களிடம் ரூ.1,996 கோடி அபராதம் வசூல் செய்த பொதுத்துறை வங்கிகள்…

 

மினிமம் பேலன்ஸ் இல்லை! வாடிக்கையாளர்களிடம் ரூ.1,996 கோடி அபராதம் வசூல் செய்த  பொதுத்துறை வங்கிகள்…

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்று கடந்த ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ரூ.1,996 கோடியை அபராதமாக வசூல் செய்துள்ளன என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அந்த கணக்கில் மாதந்தோறும் மினிமம் பேலன்ஸ் (குறைந்தபட்ச இருப்பு தொகை) பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அனுராக் சிங் தாகூர்

2019 மார்ச் இறுதி நிலவரப்படி, நம் நாட்டில் மொத்தம் 57.3 கோடி அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 35.27 கோடி ஜன் தன் கணக்குகளும் அடங்கும். இந்த கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படுவதில்லை. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதம்

2018-19ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என வாடிக்கையாளர்களிடம் பொதுத்துறை வங்கிகள் அபராதமாக  மொத்தம் ரூ.1,996 கோடி வசூல் செய்துள்ளன. 2017-18ம் நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் இல்லை என மொத்தம் ரூ.3,368 கோடி அபராதம் விதித்து இருந்தன. இது 2016-17ம் நிதியாண்டைக் காட்டிலும் சுமார் ரூ.790 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.