மாயா மாயா எல்லாம் மாயா…. மெகா கூட்டணி குறித்து அமித்ஷா அதிரடி

 

மாயா மாயா எல்லாம் மாயா…. மெகா கூட்டணி குறித்து அமித்ஷா அதிரடி

பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி ஒரு மாயை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மும்பை: பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி ஒரு மாயை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் வென்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் பாஜகவுக்கு தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி அமைவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் பாஜகவை மெகா கூட்டணி வீழ்த்துமா? இல்லை மெகா கூட்டணியை பாஜக சமாளித்து தேர்தலில் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளதால் அக்கட்சியின் தொண்டர்களும், தலைவர்களும் உற்சாகம் இழந்திருக்கிறார்கள். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்தும் என பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பல தேர்தல்களில் வியூகம் வகுத்து பாஜகவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பலமான வியூகங்களை அமைப்பார் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது வேறுபட்ட ஒன்று. எதிர்க்கட்சிகளின் கூட்டணி நிலைக்கப்போவது இல்லை. அது ஒரு மாயைக்கூட்டணி. அனைத்துக் கட்சிகளையும் எதிர்த்து 2014 தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தோம். 

அவர்கள் அனைவரும் பிராந்திய தலைவர்கள், அவர்களால் ஒருவருக்கொருவர் உதவ முடியாது. ஐந்து ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பை நாங்கள் எவ்வாறு உறுதி செய்தோம், ஊழலை எப்படி ஒழித்தோம் ஆகிய விஷயங்கள் தான் தேர்தலில் முன்னிற்கும். எட்டு கோடி இல்லங்களுக்கு கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளோம். 2.5 கோடி இல்லங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். வலுவான அரசு ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு அவசியம்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர் தேர்தல் முடிவுகள் நிச்சயம் பாஜகவுக்கு சாதகமானதாக இல்லை. ஆனால் 2019 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளோடு இவற்றை ஒப்பிடுவது சரியாக இருக்காது. மாநில தேர்தல்களை பாராளுமன்ற தேர்தல்களோடு ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இரண்டும் வெவ்வேறு களப்பிரச்சினைகளைக் கொண்ட தேர்தல்களாகும். மக்களுக்காக பணியாற்றுவதும், அவர்களை திருப்திபடுத்துவதும்தான் எங்கள் பணியாகும். அதேவேளையில், மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக அமைந்தால், அதையும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றார்.