மாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

 

மாயாவதியின் முன்னாள் செயலாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் செயலாளராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

புதுதில்லி: உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் செயலாளராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு காலகட்டம் வரை உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்தவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. இந்த காலகட்டங்களில் இவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி நேத்ரம். மாயாவதியின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த இவர், அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்றதும் முக்கியமற்ற துறைகளுக்கு மாற்றபட்டார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், தில்லி மற்றும் லக்னோவில் நேத்ரமிற்கு சொந்தமான 12 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

முன்னதாக, முதல்வராக பதவி வகித்த காலத்தில் தன் கட்சியின் சின்னமான யானை சிலைகளை அம்மாநிலத்தில் பெருமளவில் நிறுவிய வழக்கை கடந்த ஜனவரி மாதத்தில் அமலாக்கத்துறை தூசி தட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் உள்நோக்கத்துடன், பழிவாங்கும் நடவடிக்கையாக விசாரணை அமைப்புகளை இதுபோன்று பாஜக பயன்படுத்துவதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.