மலேசியாவில் இந்தியர்கள் கைது

 

மலேசியாவில் இந்தியர்கள் கைது

மலேசிய நாட்டில் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 43,962 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர்: மலேசிய நாட்டில் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 43,962 பேரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு,  அது தொடர்பாக நடத்தப்பட்ட 13,488 தேடுதல் வேட்டைகளில் 43,962 வெளிநாட்டினரை கைது செய்துள்ளது. சட்டவிரோதமாக பணியாற்றி வரும் வெளிநாட்டினரை கைது செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு நாளும் நடப்பதாக கூறியுள்ள குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி,  நவம்பர் 27-ம் தேதி நடந்த தேடுதல் வேட்டையில் மட்டும் 43 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

இந்த 43 பேர்களில், இந்தோனேசியாவை சேர்ந்த 20 பேர், வங்கதேசத்தை சேர்ந்த 12 பேர், இந்தியாவை சேர்ந்த 7 பேர், மியான்மரை சேர்ந்த 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாமை, அனுமதி காலத்தை கடந்து தங்கியுள்ளமை, அங்கீகரிக்கப்படாத அடையாள அட்டைகளை வைத்துள்ளது உள்பட குடிவரவுச் சட்டத்தை மீறிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு கூறியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அவரவர் நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். இதில் பல இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.