மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்த வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை….அமித் ஷா உறுதி

 

மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்த வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை….அமித் ஷா உறுதி

கொரோனா வைரஸ் பீதியில், மருத்துவர்களை கட்டாயப்படுத்தி வீட்டை காலி செய்ய வைத்த வீட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமித் ஷா எச்சரிக்கை செய்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளையில் மருத்துவர்கள் ஓய்வு இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் டெல்லியில் சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் வாடகைக்கு இருக்கும் மருத்துவர்களை கட்டாயப்படுத்தி மற்றும் துன்புறுத்தி காலி செய்ய வைத்தனர்.

அமித் ஷா

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் மருத்துவர்களுக்கும் நோய் தொற்று இருக்கும் என்ற அச்சத்தில் வீடுகளை காலி செய்யும்படி சில வீட்டு உரிமையாளர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதாக  செய்தி வெளியானது. இது குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

இது தொடர்பாக ஆர்.டிஏ. எய்ம்ஸ் பொதுச் செயலாளர் டாக்டர் சீனவாஸ் ராஜ்குமார் கூறுகையில், மத்திய உள்துறை அமித் ஷா டாக்டர்களின் அமைப்பை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு, இது போன்ற எந்தவொரு புறக்கணிப்பும் (வீட்டை காலி செய்ய வைத்த) தீவிரமாக எடுக்கப்படும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார் என தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சிலர் இந்த முறையில் நடந்து கொள்வது சரியல்ல என்றும் அவர்கள் மனநிலையை மாற்ற வேண்டும் என கூறினார்.