மருத்துவமனையில் கருணாஸ்.. படையெடுக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்! நடப்பது என்ன?

 

மருத்துவமனையில் கருணாஸ்.. படையெடுக்கும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்! நடப்பது என்ன?

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸை திமுக எம்.எல்.ஏ அன்பழகனும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேலும் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாஸை திமுக எம்.எல்.ஏ அன்பழகனும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேலும் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன்பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், அரசு குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க சபாநாயகர் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்றது. இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு கருணாஸ் வெற்றி பெற்றதால் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம் என்று கூட தகவல்கள் வெளியாகின. 

அந்த நிலையில் தான், சபாநாயகரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் கருணாஸின் வழக்கறிஞர்கள் இன்று மனு அளித்திருந்தனர்.

இதற்கிடையே, உடல் நிலைக்குறைவு காரணமாக இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.

anbazhagankarunas

அவரை திமுக சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் சந்தித்து, நலம் விசாரித்துள்ளார். அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேலும் கருணாஸை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

தென் தமிழகத்தில் கணிசமான அளவு வாக்கு வங்கியுடைய சமூகத்தின் பின்பலத்துடன் இயங்கி வரும் கருணாஸை தனித்துவிடுவது பலன் அளிக்காது என்ற எண்ணத்தில் தான் அன்பழகனை ஸ்டாலின் அனுப்பியதாக விவரம் தெரிந்தவர்கள் கூறிகிறார்கள்.

அதே சமயத்தில், கருணாஸின் உறவினரான டிடிவி. தினகரன் நேரில் செல்லாமல் அவரது ஆதரவாளர் வெற்றிவேலை அனுப்பி வைத்ததிலும் அரசியல் இருப்பதாகவே தெரிகிறது. எது எப்படியோ, கருணாஸுக்கு எதிராக தமிழக அரசு செயல்பட தொடங்கியதும் அவருக்கான ஆதரவு வட்டமும் பெருகி வருவது மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது.