மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி: கொந்தளித்த ராமதாஸ், கமல்ஹாசன்

 

மனோன்மணியம் பல்கலை. மாணவர்கள் மீது தடியடி: கொந்தளித்த ராமதாஸ், கமல்ஹாசன்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ராமதாஸ் மற்றும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ராமதாஸ் மற்றும் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த போலீசார், மாணவர்களை கண்மூடித் தனமாக தாக்கியதோடு மட்டுமல்லாமல், மாணவிகளையும் ஓட, ஓட விரட்டி தடியடி நடத்தினர். அந்த காட்சிகள் நேற்று மாலை முதல் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போலீசாரின் இந்த செயலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லையில் தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரி போராட்டம் நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது ட்விட்டரில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை, சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல், காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது” என போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.