மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

 

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு எதிராக திருவாரூரில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது

திருவாரூர்: ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு எதிராக திருவாரூரில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், காவிரி டெல்டா பகுதியில் வேதாந்தா நிறுவனமும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இன்றளவும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, இன்று காலை திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.