மதுபானங்கள் மீது 70 சதவீதம் வரி… தினமும் குடிப்பதற்கு பதில் இனி வாரத்துக்கு ஒரு நாள்தான்…. டெல்லி குடிமகன்கள் கவலை

 

மதுபானங்கள் மீது 70 சதவீதம் வரி…  தினமும் குடிப்பதற்கு பதில் இனி வாரத்துக்கு ஒரு நாள்தான்…. டெல்லி குடிமகன்கள் கவலை

டெல்லியில் மதுபானங்கள் மீது 70 சதவீதம் வரி விதிக்கப்பட்டபோதிலும் மது கடைகளில் விற்பனை களை கட்டியது. விலை உயர்வால் தினமும் குடிப்பதற்கு பதில் இனி வாரத்துக்கு ஒருநாள் குடிப்போம் என குடிமகன் ஒருவர் தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மது கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீசார் மதுகடைகளை வலுக்கட்டாயமாக அடைத்தனர். குடிமகன்கள் கொரோனா வைரஸை மறந்து மது வாங்க வேண்டும் ஒரே சிந்தனையில் மது கடைகளில் முன் குவிந்தனர். சமூக விலகல் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் முண்டியத்ததால் போலீசார் வேறுவழியன்றி மது கடைகளை அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள்

மதுவின் விலையை உயர்த்தினால் மது வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் அதேசமயம் அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மது பானங்களின் அதிகபட்ச சில்லரை விலையில் 70 சதவீதத்தை சிறப்பு கொரோனா வரியாக விதித்தது. நேற்று முதல் மதுபானங்கள் மீதான வரி அமலுக்கு வந்தது. வரி விதிப்பால் மதுபானங்களின் விலை உயர்ந்தது. மது விலை உயர்வால் மதுகடைகளில் கூட்டம் குறைவாக இருக்கும் என்று பார்த்தால், பல பகுதிகளில் கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் குடிமகன்கள் கால்கடுக்க நின்றனர். கடை திறந்தபிறகு மது பானங்களை வாங்கி சென்றனர். 

மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள்

மையூர் விஹார் பகுதியில் உள்ள மது கடையில் மது வாங்க வரிசையில் நின்ற பெண்மணி ஒருவர் கூறுகையில், மது வாங்க விரும்புவர்கள் கட்டாயம் வந்து வாங்கி செல்வார்கள். வாங்க முடிந்தவர்கள் மது வாங்குவார்கள். அரசு வரியை உயர்த்தியதால் எந்த வித்தியாசமும் உருவாகாது என தெரிவித்தார். மற்றொரு நபர் கூறுகையில், 40 நாட்களுக்கு பிறகு மது கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி. டெல்லி அரசு வரியை உயர்த்தும் என்பது எங்களுக்கு தெரியும். தினமும் குடிப்பதற்கு பதில் வாரத்துக்கு ஒருநாள் குடிப்போம். வேறு என்ன செய்ய நாங்கள் என தெரிவித்தார்.