மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்ததால் ரூ.19 ஆயிரம் கோடி மிச்சம்!

 

மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்ததால் ரூ.19 ஆயிரம் கோடி மிச்சம்!

மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்ததால் ரூ.19 ஆயிரம் கோடி மானியம் மத்திய அரசுக்கு மிச்சமாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ. ஆட்சிக்கு வந்தது முதல் குறிப்பாக 2015-16ம் நிதியாண்டு முதல் சமையல் கியாஸ் மற்றும் மின் இணைப்பு வழங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்து வருகிறது. பொது விநியோக அமைப்பு வாயிலாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. 

சமையல் கியாஸ்

மண்ணெண்ணெய் மானியத்துக்காக பெரும் தொகை மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் தற்போது மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதால் மத்திய அரசுக்கு ரூ.19 ஆயிரம் கோடி அளவுக்கு மானியம் மிச்சமாகியுள்ளது.

இந்த நிதியாண்டில் மண்ணெண்ணெய் பயன்பாடு 33 லட்சம் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015-16ம் நிதியாண்டில் மண்ணெண்ணெய் பயன்பாடு 68 லட்சம் டன்னாக உயர்ந்து இருந்தது. தற்போது மண்ணெண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளதால் மத்திய அரசுக்கு மானியம் செலவினம் மிச்சமாகும். 

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சமையல் மற்றும் விளக்கு தேவைக்காக பொது விநியோக முறையின்கீழ் காலாண்டுக்கு ஒருமுறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்கிறது. அதேசமயம், 100 சதவீதம் சமையல் கியாஸ் இணைப்பு மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு என்பதை நோக்கி நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மண்ணெண்ணெய் ஓதுக்கீடு குறைந்துள்ளது.

ரேஷன் கடை

மேலும், மண்ணெண்ணெய் பயன்பாட்டை குறைக்க 2015-16ம் நிதியாண்டில் பண ஊக்க திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் கர்நாடகம், தெலங்கானா, அரியானா, நாகலாந்து, பீகார், ராஜஸ்தான், குஜராத், கோவா, ஆந்திரபிரதேசம், புதுச்சேரி மற்றும் மகாராஷ்ரா ஆகிய மாநிலங்கள் தானாகவே முன்வந்து கணிசமான அளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை சரண்டர் செய்தன. இந்த திட்டத்தின்கீழ், இதுவரை மாநிலங்களுக்கு ரூ.500 கோடி மாநிலங்களுககு வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசியல் பின்னடைவு ஏற்படும் என்ற பயத்தில் பல மாநில அரசுகள்  மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்க தயங்குகின்றன.