மக்களவை தேர்தல் 2019; பிரபலங்களை களமிறக்கும் மம்தா!

 

மக்களவை தேர்தல் 2019; பிரபலங்களை களமிறக்கும் மம்தா!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்

கொல்கத்தா: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தேசிய அளவில் சில கட்சிகள் தொகுதி பங்கீட்டை முடித்து கூட்டணியை இறுதி செய்துள்ளது. சில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், தேசிய அளவில் பாஜக-வை வீழ்த்த மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளார்.

இதற்காக, பாஜக-வுக்கு எதிரான மாற்று மெகா அணியை உருவாக்கும் பொருட்டு, நாடு முழுவதும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரமாண்ட மாநாடு ஒன்றையும் மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அவர் நடத்தினார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் முக்கிய பங்கு வகித்து வரும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்ப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கனவே சிட்டிங் எம்.பி.,-க்கள் 10 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை.

அத்துடன், 41 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரபல நடிகைகள் மிமி சக்ரபூர்த்தி, நுஸ்ரத் ஜஹான், பெங்கால் நடிகர் தேவ், அர்ஜுனா விருது பெற்ற இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரசூன் பானர்ஜி உள்ளிட்டோருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தனது கன்னிப்பேச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹார்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், பிரபல வரலாற்றாளருமான சுகத்தா போஸுக்கு இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை. பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி அளிக்காததால் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறை வாய்ப்பளிக்கப்படாதவர்கள் கட்சி பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அந்தமான் நிகோபார் தீவுகள், ஒடிசா, அசாம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் சில தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடப் போவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.