மகாராஷ்டிரா மருத்துவமனையில் கொடூரம்….. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அவலம்

 

மகாராஷ்டிரா மருத்துவமனையில் கொடூரம்….. நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறையில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட அவலம்

மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டு இருப்பதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிராவில் தொற்று நோயான கொரோனா வைரஸ் தனது ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது. அம்மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக உள்ளது. அந்நகரத்தில் உள்ள பெரும்பான்மையான மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்ப வழிகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் மும்பை மருத்துவமனை ஒன்றில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டில் இந்த தொற்று நோயால் இறந்தவர்களின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளிகள் சிகிச்சை பெறும் அறையில் சடலம்

மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனை அம்மாநகராட்சியால் நிர்வாகம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் அருகில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல்கள் பேக்கில் சுற்றப்பட்டு கிடப்பதை ஒரு செல்போனில் படம்பிடித்த வீடியோ காட்டுகிறது. இந்த திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே

மகாராஷ்டிரா பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே டிவிட்டரில் இந்த வீடியோவை பதியேற்றம் செய்தார். மேலும் சியோன் மருத்துவமனையில், நோயாளிகள் இறந்த உடல்களுக்கு அருகில் தூங்குகிறார்கள். இது தீவிரமானது. இது என்ன வகையான நிர்வாகம்! மிகவும் வெட்கக்கேடானது! என பதிவு செய்து இருந்தார். சியோன் மருத்துவமனையின் டீன் இது குறித்து கூறுகையில், கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் எடுக்க தயங்கினர். சடலங்கள் கவனிக்கப்படாமல் வைக்கப்பட்டதற்கு இதுவே காரணம். நாங்கள் இப்போது உடல்களை அகற்றி விட்டோம். இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.