மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்…. பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசிய ராஜ் தாக்கரே….

 

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பம்…. பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசிய ராஜ் தாக்கரே….

பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சந்தித்து பேசியது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ராஜ் தாக்கரே பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. இவர் மறைந்த பால்தாக்கரேவின் சகோதரி மகன். முதலில் சிவ சேனாவில் இருந்த ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியை தொடங்கினார். மக்கள் மத்தியில் ராஜ் தாக்கரேவுக்கென தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக அந்த கட்சி தேர்தலுக்கு தேர்தல் சரிவை சந்தித்து வருகிறது.

தேவேந்திர பட்னாவிஸ்

2014ல் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ராஜ் தாக்கரேவின் கட்சி 13 இடங்களில் வென்றது. ஆனால் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் கட்சியின் செல்வாக்கை எப்படி மீட்டு எடுப்பது என்று யோசனை செய்து வந்தார். இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வுடான 35 ஆண்டுகால கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்தது. 

மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கொடி

இந்நிலையில், நேற்று பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸை ராஜ் தாக்கரே சந்தித்து பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அவர் பேசியதாக தகவல். சிவ சேனாவால் கைவிட்டப்பட்டதாக கருதப்படும் இந்து ஆதரவு சித்தாந்த வெற்றிடத்தை நாம் நிரப்பி விடலாம் என ராஜ் தாக்கரே திட்டமிட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த நாளுமன்ற தேர்தலின் போது ராஜ் தாக்கரே பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.