போலி வலி நிவாரண மருந்துக்கு புரமோஷன்: விளம்பரத்தில் நடித்த 2 பாலிவுட் நடிகர்களுக்கு நீதிமன்றம் அபராதம்

 

போலி வலி நிவாரண மருந்துக்கு புரமோஷன்: விளம்பரத்தில் நடித்த 2 பாலிவுட் நடிகர்களுக்கு நீதிமன்றம் அபராதம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்நகர் நுகர்வோர் நீதிமன்றம் போலியான வலி நிவாரண மருந்தின் விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகர்கள் கோவிந்தா, ஜாகிஷெராப் ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அபினவ் அகர்வால் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது தந்தை பிரிஜ்பூசன் அகர்வாலுக்காக (வயது70) வலிநிவாரண மருந்து ஆர்டர் செய்தார். நாளேடுகளில் ரூ.3600  என்று விளம்பரம் செய்யப்பட்டு, வலிநிவாரண மருந்தைப் பயன்படுத்திப்பாருங்கள் 15 நாட்களில் வலி குறையவில்லை என்றால் முழுபணமும் வாபஸ் என்று விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த மருந்தை பாலிவுட் நடிகர்கள் கோவிந்தா மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் விளம்பரம் செய்து இருந்தனர்.

ஜாக்கி ஷெராப்

இதைப் பார்த்து வழக்கறிஞர் அபினவ் அந்த மருந்தை வாங்கி தனது தந்தைக்கு கொடுத்தார். அவரது தந்தையும் அந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து மருந்து நிறுவனத்திடம் மருந்தை ஒப்படைத்து பணத்தை திரும்ப தருமாறு அகர்வால் கேட்டார். அதற்கு மருந்து நிறுவனம்  மருந்தை திரும்ப கொடுத்து விட்டு பணத்தை பெற்று கொள்ளுங்கள் என தெரிவித்தது. இதனையடுத்து அவரும் மருந்தை திருப்பி கொடுத்தார் ஆனால் நிறுவனம் சொன்ன மாதிரி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

நீதிமன்றம் உத்தரவு

இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றத்தி்ல் அகர்வால் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருந்து விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் கோவிந்தா, ஜாக்கி ஷெராப், டெலிமார்ட் ஷாப்பிங், மேக்ஸ் கம்யூனிகேசன் , மருந்து நிறுவனம் ஆகியவை பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் அகர்வாலக்கு தலா ரூ 20 ஆயிரம் எனக்கு இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்குக்கான செலவு மற்றும் மருந்துக்காக செலவிட்ட ரூ.3,600-ஐ ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் மருந்து நிறுவனம் அகர்வாலுக்கு திரும்ப வழங்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.