போராடும் உரிமை இருக்கிறது…. அதேசமயம் பொது சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது – பிரதமர் மோடி கண்டிப்பு

 

போராடும் உரிமை இருக்கிறது…. அதேசமயம் பொது சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது – பிரதமர் மோடி கண்டிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரில், பொது சொத்துக்களை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களை கண்டிக்கும் வகையில், உங்களுக்கு போராடும் உரிமை இருக்கிறது. அதேசமயம் பொது சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

உத்தரப் பிரதேசம் லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்களை கடுமையாக சாடினார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

வாஜ்பாய் சிலை

குடியுரிமைச் திருத்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதையும் நம்மால் நியாயப்படுத்த முடியுமா? அது சரியானதா என மக்கள் கேட்கிறார்கள். வதந்தியின் மாயவலையில் மக்கள் விழுந்து விடக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் பொது சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது.

காருக்கு தீ வைப்பு

அது எதிர்கால சந்ததியினருக்கானது, எரிக்கப்பட்டவை அவர்களது குழந்தைகளின் பயன்பாட்டுக்கானது அல்லவா? போலீஸை மக்கள் மதிப்பது அவசியம். அவர்கள்தான் நம்மை பாதுகாக்கிறார்கள். உரிமைகளுக்கு வரம்புகள் உள்ளன. அதேசமயம் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பரந்த அளவை கொண்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.