போட்டியில்லாத தலைவர் ஆனார் பி.சி.ஸ்ரீராம்: ஒளிப்பதிவாளர்கள் தேர்தலில் சுவாரஸ்யம்!

 

போட்டியில்லாத தலைவர் ஆனார் பி.சி.ஸ்ரீராம்: ஒளிப்பதிவாளர்கள் தேர்தலில் சுவாரஸ்யம்!

திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு என்பது கண்கள் போல் முக்கியமானது. ஒளிப்பதிவில் தமிழ் சினிமாவை இந்தியாவே கவனிக்கும்படி செய்தவர் பி.சி.ஸ்ரீராம். 

சென்னை: திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு என்பது கண்கள் போல் முக்கியமானது. ஒளிப்பதிவில் தமிழ் சினிமாவை இந்தியாவே கவனிக்கும்படி செய்தவர் பி.சி.ஸ்ரீராம். 

இவர் பணிபுரிகிறார் என்றால் அந்தப்படத்திற்கு உலக அளவிலான பார்வை கிடைத்து விடும். இவரிடமிருந்து மாணவர்களாக வெளியில் வந்தவர்கள்தான் இப்போது பாலிவுட்டில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களாக இருக்கிறார்கள். 

சினிமாவில் ஒளிப்பதிவாளர்களுக்கும் இயக்குநர்களுக்கு கிடைக்கும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது பி.சி.ஸ்ரீராம்தான். ஆனால் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு குறை என்றால் யாரும் கவனிக்கமாட்டார்கள். இதனால் ஒளிப்பதிவாளர்களுக்கு தனியே சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது.

இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தாரே தவிர எந்த பொறுப்பும் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தார் பி.சி.ஸ்ரீராம். ஆனால் கடந்த ஆண்டு இந்த சங்கத்தில் ஊழல் நடந்ததாகக்கூறி பலரும் குரல் கொடுத்த நிலையில், பலரது வற்புறுத்தலுக்கு செவி சாய்த்து அந்த தேர்தலில் ஸ்ரீராம் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று வென்றார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்க இருந்த நிலையில் எல்லோரின் வற்புறுத்தலுக்கும் இணங்கி மீண்டும் போட்டியிட்டார் பி.சி.ஸ்ரீராம். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் ஏகமனதாக அவரே தலைவர் என்று உறுப்பினர்கள் முடிவு செய்து அறிவித்தனர். பிற பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.