பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோவை வெளியிட்டது ஏன்?!: உண்மையை உடைத்த நக்கீரன் கோபால்

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோவை வெளியிட்டது ஏன்?!: உண்மையை உடைத்த நக்கீரன் கோபால்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது’ என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது’ என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் விளக்கம் அளித்துள்ளார்.

பதைபதைக்கும் உண்மை:

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

pollachi ttn

இந்நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டது நக்கீரன் தரப்பு தான். பெண் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை இப்படி பொது வெளியில் வெளியிடலாமா? என்று சிலர் நக்கீரன் கோபால் மீது பாய, அதற்கு சரியான பதிலடி கொடுத்து உண்மையைப் பறைசாற்றி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்.

 

gopal ttn

வீடியோவை வெளியிட்டது ஏன்?

இவ்விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நக்கீரன் கோபால் பேசும் போது, ‘பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜன் யார்? உங்களது அரசியல் சண்டையைப் பேரவையில் வைத்து கொள்ளுங்கள். பெண்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். வீடியோவை வெளியிடக் கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கருத்தை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டதால் தான் உண்மை வெளியே வந்தது. குற்றவாளிகள் தப்பிக்க கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

gopal ttn

தொடர்ந்து பேசிய அவர், ‘ஆதாரங்கள் இருந்தும் வதந்தி என்று கூறுவது சரியா? பார் நாகராஜனை காப்பாற்ற அரசு முயல்கிறது. நமது வீட்டு பிள்ளைகளுக்கு இது போன்று நடந்தால் சும்மா இருந்து விடுவோமா? அவர்களும் நம் வீட்டு பிள்ளைகள் தான். பள்ளி குழந்தைகள் முதல்,  பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பார் நாகராஜனை விசாரித்தால் உண்மை வெளிவரும். பொள்ளாச்சி விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை விடமாட்டேன்’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

வலுக்கும் கோரிக்கை:

 

harassmnet ttn

இவ்விவகாரத்தை பொறுத்தவரையில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுத்து இனிமேல் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்காத வகையில் அரசு வழிவகுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.