பொள்ளாச்சி அருகே புதுமனை வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகன் கைது

 

பொள்ளாச்சி அருகே புதுமனை வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சிய மாமனார், மருமகன் கைது

புதுமனை வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மாமனார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கோவை: புதுமனை வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மாமனார் மற்றும் மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3023-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 1379 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக மது கிடைக்காமல் ‘குடி’மகன்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இதனால் ஆல்கஹால் கலந்துள்ள வார்னிஷ், சானிடைசர் போன்றவற்றை போதைக்காக குடித்து சிலர் இறந்துள்ளனர். மேலும் சிலர் கள்ள சாராயம் கிடைக்கிறதா என்று அலைகின்றனர். இன்னும் சிலர் ஆன்லைனில் பார்த்து தாங்களே சுயமாக கள்ள சாராயம் காய்ச்சும் அளவுக்கு சென்று விட்டனர். அந்த வகையில் பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பொள்ளாச்சி அருகேயுள்ள மஞ்சநாயக்கனூர் பூங்கா நகரில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக ஆழியார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். துறையூர் மேட்டைச் சேர்ந்த சீமார் வியாபாரி நிஜுசுதர்சன் (வயது 25) மற்றும் அவரது மாமனார் ராஐகோபால் (வயது 43) இருவரும் புதிதாக கட்டப்பட்டுள்ள அவர்களது வீட்டில் சாராய ஊறல் போட்டு கள்ளச் சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது. புதுமனை வீட்டில் பொதுவாக பால் காய்ச்சுவதை தான் மக்கள் பார்த்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் கள்ள சாராயம் காய்ச்சியது பற்றி அப்பகுதியில் பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்நிலையில், அவர்களிடம் இருந்து ஊரல், கேஸ் சிலிண்டர், அடுப்பு, கள்ளச்சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் யூடியூப் வீடியோவை பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மதுவிலக்கு அமலாக்க துறை காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.