பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை! சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சி

 

பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை! சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ச்சி

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவு கண்டு இருக்கும் கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 336 புள்ளிகள் வீழ்ந்தது.

கடந்த செப்டம்பர் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. அந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹாங்காங் போராட்டத்துக்கு அமெரிக்க ஆதரவு தெரிவித்து  இருப்பது ஒப்பந்தம் நிறைவேறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது. இதுவும் நம் நாட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டதற்கு முக்கிய காரணம்.

ஹாங்காங் போராட்டத்துக்கு  அமெரிக்கா ஆதரவு

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் பார்தி ஏர்டெல், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் என்.டி.பி.சி. ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. யெஸ் பேங்க், இந்துஸ்தான் யூனிலீவர், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பொருளாதார வளர்ச்சி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,220 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,341 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 190 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.71 லட்சம் கோடியாக குறைந்தது.

சென்செக்ஸ், நிப்டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 336.36 புள்ளிகள் வீழ்ந்து 40,793.81 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 95.10 புள்ளிகள் சரிந்து 12,056.05 புள்ளிகளில் முடிவுற்றது.