பைக் ரேஸில் ஈடுபட்‌ட 21 பேர் கைது! சென்னை காவல்துறை அதிரடி 

 

பைக் ரேஸில் ஈடுபட்‌ட 21 பேர் கைது! சென்னை காவல்துறை அதிரடி 

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் ஆபத்தான பைக் ரேஸ்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறையும் சென்னை மாநகர காவல்துறையும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பைக் ரேஸில் ஈடுபட்‌ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் ஆபத்தான பைக் ரேஸ்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல்துறையும் சென்னை மாநகர காவல்துறையும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பைக் ரேஸில் ஈடுபட்‌ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் கடந்த சில தினங்களாகவே அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். பணம், பைக் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பந்தயம் வைத்து ரேஸில் ஈடுபடுவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த பைக் ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில்19 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்த நிலையில் பைக் ரேஸில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்து வந்தது. எனினும், நேற்றிரவும் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தடுக்க போக்குவரத்து காவல்துறையோடு சென்னை மாநகர காவல்துறையும் கைகோர்த்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. காமராஜர் சாலை, ஆர்‌கே சாலை உள்ளிட்ட சாலைகளில் 29 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 2 இணை ஆணையர்கள் மேற்பார்வையில் 130க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் விரட்டி‌ச் சென்று பிடித்தனர். தலைக்கவசம் அணியாமல் சென்றது, அதிவேகமாகவும் ஆபத்தாகவும் வாகனங்களை இயக்கியது என கடந்த 2ஆம் தேதி மட்டும் மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

காமராஜர் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர்களை பிடிக்க முயன்ற காவல்துறையினரை சுமார் 15 இளைஞர்கள் தாக்க முயன்றுள்‌னர். இதில் சோழவரத்தை சேர்ந்த தியாகு என்பவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் காமராஜர் சாலையில் பைக் ரேஸில் ‌ஈடுபட்டதாக 21 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.