பேரிடர் காலத்தை சேதாரமின்றி கடந்திட அனைத்துக் கட்சிக் கூட்டம்… ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

 

பேரிடர் காலத்தை சேதாரமின்றி கடந்திட அனைத்துக் கட்சிக் கூட்டம்… ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

பேரிடர் காலத்தை எந்த ஒரு சேதாரமுமின்றி கடந்திட அனைத்துக் கட்சி கூட்டம் உதவியாக இருக்கும், அதனால் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரின் ஆலோசனையையும் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பேரிடர் காலத்தை எந்த ஒரு சேதாரமுமின்றி கடந்திட அனைத்துக் கட்சி கூட்டம் உதவியாக இருக்கும், அதனால் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைவரின் ஆலோசனையையும் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் தி.மு.க தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
“உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. வல்லரசு நாடுகளே போகும் திசை தெரியாமல் தினந்தோறும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் ஒற்றை மனிதர்கூட மனநிம்மதியாக இருக்க முடியாதபடி, மிகப் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியான கொரோனா வைரஸ். இந்தக் கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என 21 நாள் ஊரடங்கினை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன், 5 நாட்கள் ஆகிவிட்டன. நாடு மிகப் பெருமளவு முடங்கியிருக்கிறது.

corona-in-america

கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு முதற்கட்ட நடவடிக்கை மற்றவர்களிடமிருந்து தனித்திருத்தல்தான் என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் வலியுறுத்திய காரணத்தால்தான், இதனைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முதன்மையானவை என்பதை உணர்ந்திருந்ததால், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குரிய முகக்கவசம், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப் பெட்டகத்தை தி.மு.கழகத்தின் சார்பில் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியதுடன், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஊடகத்தினருக்கும் அளித்தோம். இதனைப் பின்பற்றி மற்ற தொகுதிகளைச் சேர்ந்த கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களும் மருத்துவப் பெட்டகங்களை வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

dmk-donates

ஊரடங்கு காரணமாக ஏழை – எளிய சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டினோம். அமைப்பு சாரா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை மனதில்கொண்டு தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்ற முடிவெடுத்து அறிவித்தோம். சொந்த மாநிலத்தை விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருந்த எந்த மாநிலத்து மக்களாக இருந்தாலும் அவர்களுக்கும் நம்மைப் போலத்தானே வயிறு இருக்கிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. அவர்களின் வாழ்வாதாரம் குறித்து முன்கூட்டியே கவனிக்காத நிலையில், கொரோனா பாதிப்பால் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகட்டும், இப்போதைக்குப் பட்டினியால் சாக முடியாது என அவர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள தங்கள் ஊரை நோக்கி நடந்தே செல்லத் துணிந்தது, இந்தியாவின் இன்னொரு சோகமான முகத்தை நமக்குக் காட்டியது.

delhi-walking

தி.மு.க.,வின் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் ஊதியத்திலிருந்து நிதி வழங்கி, மக்களைக் காக்கும் பணியில் தங்களின் பங்களிப்பைச் செலுத்தினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என்பதால் கழகத்தின் 98 சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் 1 கோடியே 2 லட்சத்து 90ஆயிரம் ரூபாயும், மக்களவை உறுப்பினர்கள் 23 பேர் சார்பில் தலா 1 லட்சம் என 23 லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளன. காசோலை வழியாக வழங்குவது இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தனை எளிதானதும் உகந்ததும் அல்ல என்பதால், பெரும்பாலும் இணையச் சேவை மூலமே நிதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு எம்.எல்.ஏவும் தலா இருபத்தைந்து லட்ச ரூபாய் வரையிலும், எம்.பிக்கள் ஐம்பது லட்சம் ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலும் தி.மு.கழக மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காகத் திராவிட முன்னேற்றக் கழக அறக்கட்டளை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற தோழமைக் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களும் தங்கள் சார்பில் நிதியளித்துள்ளனர். கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களும் நிதி அளித்துள்ளனர். அரசியல் கண்ணோட்டங்களை அகற்றி ஒதுக்கிவைத்து, கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணியில் தி.மு.கழகம் முழு மனதுடன் மத்திய – மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. முன்கூட்டியே ஆலோசனைகளைத் தெரிவிக்கிறது. தமிழக அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கிட வலியுறுத்துகிறது. மத்திய அரசின் உள்துறை – சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் கவனம் செலுத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
பேரிடரான சூழலில், ‘தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல’ நடவடிக்கைகள் அமைந்துவிடக்கூடாது என்கிற அக்கறையுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாகவேனும் நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். பலதரப்பட்ட கருத்துகளுடன், ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன், பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த ஒரே நோக்கிலான முயற்சியே இந்தப் பேரிடர் காலத்தைச் சேதாரம் சிறிதுமின்றிக் கடந்திட உதவிகரமாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

dmk stalin

பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட தி.மு.க ஒருபோதும் தயங்கியதில்லை. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் – உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்போர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கி, அனைத்து முனைகளிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம் – மனத்திடத்துடன் துணிந்திருப்போம் – எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம்!” என்று கூறியுள்ளார்.