பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள்: ஆளுநருக்கு 2,000 பேர் தபால்

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள்: ஆளுநருக்கு 2,000 பேர் தபால்

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி 2,000 பேர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தபால் அனுப்பியுள்ளனர்.

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி 2,000 பேர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தபால் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடி வருகின்றனர். இதனையடுத்து அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியதால், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

ஆனால் இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்தவிதமான முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். அவரது இந்த மவுனம் அரசியல் சார்ந்தது எனவும், ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார் என்றும் எதிர்க்கட்சியினர் உட்பட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக சிறையில் தவிக்கும் அவர்களை விடுதலை செய்ய கோரி காங்கயத்தில் புரட்சிகர முன்னணி சார்பில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கயம், வெள்ளகோவில், நத்தகாடையூர் பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்று ஆளுநருக்கு தபால் அனுப்பி வைத்தனர்.